அறுகம்புல்
- Yogi.L.L.S.Manikghantan ,MA(YOGA),RMP(AM)
- Jun 29, 2016
- 4 min read
அறுகம்புல்
CYNODON DACTYLON
தாவரக் குடும்பம் : POACEAE-4
வேறு பெயர்கள்
தமிழ் அருகு, அறுகம்புல், பிள்ளையார் புல்.
சமஸ்கிருதம் துர்வா, நிலதுர்வா, க்ராந்தி, ஸ்வேதா
ஹிந்தி தூர்வா, தூம்.
தெலுங்கு காரிகா, காரிகாகட்டி, ஜெரிக்கி, ஹர்யாலி
கன்னடம் அம்பேட்டி ஹால்லு, காரிகா ஹால்லு
மலையாளம் கருக்கா, கருகப்புல்லு
உருது ஹாஸ் (GHASS)
ஆங்கிலம் BERMUDA GRASS, DOG GRASS, AHAMA GRASS, INDIAN DOAB, GRAMA.
அறுகு
ஓரிடத்தில் முளைத்து பல இடங்களிலும் வேறூன்றிப் பரவும். நீண்ட கூர்மையான இலைகள் அகலவாட்டம் குறுகியிருக்கும். தண்டு குட்டையானதாய்க் காணப்படும். நுனி கூர்மையாய் இருக்கும்.
வளரியல்பு
சிறுசெடி, புல் வகையைச் சார்ந்தது. ஈரப்பாங்கான வயல் வரப்புகள், தரிசுநிலங்கள் மற்றும் சாலை ஓரங்களில் காணப்படும். எல்லா வகையான நிலங்களிலும் வளரும் தன்மை வாய்ந்தது. இருப்பினும் நிலச்சத்து
(pH மதிப்பு) 4.5 - 8.5 க்குள் இருப்பது உகந்ததாகும். சுமார் 5.5 க்கும்மேல்
pH மதிப்பு இருக்கும் இடத்தில் மிக நன்றாகவே செழித்து வளரும். அறுகிற்கு ஆண்டு மழையளவு 625 - 1750 மி.மீ இருந்தாலே போதுமானது. மழையில்லாவிட்டாலும் காய்ந்தது போல காணப்படுமேயன்றி அழிந்து போகாது.
அறுகின் பெருமை:
1.சுமார் 20 லட்சம் மூலிகை களில் முதலாவதாகப் பிறந்த முதன்மையான மூலிகை அறுகம்புல்.
2. புல் இனத்தில் முதலும் மூலமுமானது.
3. நோய்களை வேரோடு அறுப்பதால், சித்தர்கள் இதற்கு அறுகு எனப் பெயரிட்டனர்.
4. தச நாடிகளில் பிரதான மான இடநாடி, வலநாடி மற்றும் அதனோடு சார்ந்த 72,000 நரம்புகளையும் இயக்க வல்லது.
5. இதன் பெருமையினை மக்கள் உணர வேண்டும் என்பதற்காக பெரியோர்கள், சாணத்தில் அறுகினை குத்தி வைத்துப் பார்க்கச் செய்தனர். சாணம் புழுக்களால் பாதிப்படை யாமல் இருப்பதையும் மறைமு கமாக அறிவிற்கு உணர்த்தி இதனைப் போற்றுங்கள் என்ற தகவலை விட்டுச் சென்றனர்.
அறுகும் - ஆன்மீகமும்
பிள்ளையார் சிலைக்கு அறுகம்புல் மாலை அணிவித்து வழிபாடு செய்வது என்பது தொடரும் வழக்கம். இதன் கருவாய் விளங்கும் பொருள்தான் என்ன எனப் பார்ப்போம்.
மனிதனுக்கு பாலுணர்வு சுரப்பி மையம் கொண்டுள்ள இடம் யோக சாஸ்திரத்தில் மூலாதாரம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உடலின் சக்தி உயிர்சக்தி எனப்படுகிறது. மூலாதாரப் பகுதியில் தான் உயிர்சக்தியும் மையம் கொண்டுள்ளது. உயிர் சக்திக்கு குண்டலினி சக்தி என்ற பெயரும் உண்டு. பருத்தோற் றமான பருவுடல் ஐவகை பெளதீக கூட்டினால் ஆனது. (மண், நீர், நெருப்பு, காற்று, விண்) ஐந்து பெளதீக கூட்டுத்தோற்றத்தின் மையமும் மூலாதாரமே.
இதனை விளக்க வந்ததுவே ஐங்கரத்தான் வழிபாடு. ஐந்து பெளதீகத்திற்குமான ஆன்மத் தொடர்பினை விளக்கிட மூலாதாரத்தில் ஐந்து கரத்தனை கொண்டு வழிபட்டோரும் உண்டு. வினை தீர வேண்டுமாயின் மூலாதாரத்தில் உள்ள வினைப் பதிவுகள் அழிய வேண்டும் அல்லது கரைய வேண்டும். எனவே வினைதீர அல்லது துன்பம் நீங்கிட ஐந்து கரத்தனை வழிபடு எனப் பெரியோர்கள் உணர்த்தினார்கள். மக்களின் புரிதல் மற்றும் அறிவுத் திறனுக்கொப்ப பல விளக்கங் களும், பழக்கங்களுமாய்த் தொடர்ந்தன.
ஐங்கரத்தானுக்கு அறுகு
ஓரிடத்தில் (மூலாதாரத்தில்) வேறூன்றி சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்கினை என்ற உடல் மையப் பகுதிகளிலெல்லாம் பொருந்தி சகஸ்திராரத் தளத்தில் பல நுனிகளாக தழைத்தால் மனித அறிவு அவனுக்கும் உலகிற்கும் நன்மைகளையே செய்திடும் என்பதால் அறிவுக் கடவுளாகவும் ஐந்து கரத்தானை வழிபட்டோரும் உண்டு. அதற்கு அறுகும் பயன்பட்டது.
மொத்தத்தில், முன்னோர் களின் ஒவ்வொரு சடங்கிற்கும் பின்னணியில் வினைத்தூய்மை அல்லது துன்பமில்லா வாழ்வு மனிதன் காண வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தி ருக்கிறது என்பதையும் இங்கு புரிந்து கொள்ளலாம்.
இத்தகைய நோக்கத்தை அடையச் செய்வதற்கான நற்கல்வி யைத்தான் ஆன்மீகம் என்றும் அழைக்கலாயினர்.
ஆகாதது அறுகம்புல்லால் தான் ஆகும் என்பதைப் பற்றி தெரிந்தோ, தெரியாமலோ பல வேண்டுதலோடு பிள்ளையார் சிலைக்கு அறுகம் புல்லை சார்த்துவோரும் உண்டு.
உள்ள கருத்தினை காணும் போது, தீராத வியாதிகளாக இருந்தாலும், பல மருந்துகள் பல காலங்களாக சாப்பிட்டும் நோய் தீரவில்லை என்றாலும் அறுகை நாடுங்கள் - ஆகாதது ஆகும் - ஆறாதது ஆறும்.
நோய் நீக்கிடும் அறுகு
1. அமிலத்தின் தன்மை உடலில் பெருகினால் நோயும் பெருகும். காலையில் அருந்தும் டீ, காப்பி மற்றும் சூடான உணவு போன்றவை உடலில் அமிலத் தன்மையினை அதிகரிக்கச் செய் திடும் என்பதை புரிந்துகொண் டோரில் பலர் காலையில் டீ, காப்பி குடிப்பதை நிறுத்திவிட்டனர். காலையில் டீ, காப்பி குடிப்பதை நிறுத்தி இன்றே, இப்பொழுதே வெற்றி காண்போம்.
2. அதிகாலை வெறும் வயிற்றில் அறுகம்புல் சாறு குடித்து வர பொதுவாக அனைத்து நோய் களும் குணமாகும். இதனை நடைமுறைப்படுத்திட இரத்தம் தூய்மை பெறும். உடலில் உள்ள நச்சுக் கிருமிகள் அழியும். உடலில் விஷமும், விஷகலையும் முறியும்.
அறுகம்புல் சாறு தயாரிக்கும் முறை:
அ) இயற்கை உரங்களால் தயாரான அறுகம் புல்லை ஒரு கைப்பிடி அளவு அன்போடு பறித்துக் கொள்ளுதல்
ஆ) கணுக்களை நீக்கி, நீரில் நன்றாக அலசி, பின் அம்மியில் சிறிது நீர் தெளித்து நன்றாக அரைத்து ஒரு குவளை நீரில் (150 மி.லி.) கலக்கி வடிகட்டி எடுத்துக் கொள்ளுதல்
இ) சிறிய கரண்டியின் உதவி யினால் அல்லது சிறிது சிறிதாக உமிழ் நீரில் கலந்து சுவைத்து மென்று சாப்பிடலாம் ( குறைந்தது 10 நிமிடங்களாவது எடுத்துக் கொள்ள வேண்டும். கடகட வென்று குடிக்கக் கூடாது)
ஈ) அறுகுச் சாறு குடித்தபின் குறைந்தது 1மணி முதல் 2 மணி நேரத்திற்கு வேறு எதுவும் சாப்பிடக் கூடாது.
உ) குறைந்தது 48 நாட்கள் தொடர்ந்து சாறு உண்டு வர பலன் பல காணலாம்.
நோய்களுக்கு - அறுகு
1. முக்குற்றம்
அறுகம்புல் ஊறல் நீருடன் பாலும் சேர்த்து உட்கொள்ள கண் நோய், கண்புகைச்சல், தலை நோய் குருதியழல் ஒழியும். முக்குற்றத் தால் விளையும் நோயும் குறைந்து உடலுக்கு ஊக்கமளிக்கும்.
2. சொறி, சிரங்கு
அறுகம்புல்லுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துப்பூச சொறி, சிரங்கு, படர் தாமரை முதலியன குணமாகும். நுண் புழுக்களும் சாகும்.
3. காயம்
திடீரென ஏற்படும் வெட்டு, காயம் போன்ற ரண காயங்களுக்கு அரிவாள்மூக்கு என்ற பச்சிலை யுடன் அறுகையும் சம அளவு அரைத்துக் கட்டினால் உதிரப் போக்கு உடனடியாக நின்றுவிடும். காயமும் வெகு விரைவில் குணமாகும். அரிவாள்மூக்கு பச்சிலை கிடைக்காவிடில் தனி அருகம்புல்லை மட்டுமே அரைத்துப் பூசி பலன் காணலாம்.
4. உடல் தேற
நமது உடல் தேறவும், குழந்தைகளின் உடல் தேறவும் கடைகளில் உள்ள பலவிதமான ஊட்டச்சத்து பானங்களை விட அறுகம்புல் சாறு சிறந்தது. நல்ல தளிர் அறுகம்புல்லைச் சேகரித்து நீரில் கழுவி நைய அரைத்து பசும்பாலுடன் சேர்த்து சுண்டக் காய்ச்சி நாள் தோறும் இரவு படுக்கச் செல்லுமுன் பருகி வந்தால் பலவீனமான உடல் தேறி பலம் காணும். இதே முறையை வளர்ந்து வரும் குழந்தைகளுக்கும் பயன்படுத்தலாம். பலன் பல உண்டு.
5. அதிகப் படியான இரத்தப் போக்கு
அறுகம்புல்லுடன் மாதுளை இலையைச் சேர்த்து கஷாயமாக்கி காலை, மாலை இரண்டு வேளையும் 100 மி.லி. அளவு குடித்து வர பெண்களுக்கு மாதவிலக்கின் போது ஏற்படும் அதிகப் படியான இரத்தப் போக்கு கட்டுப்படும்.
6. எரிச்சல்
அருகம்புல் வேரையும் அகத்தி வேரையும் இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து காலையில் அதனை காய்ச்சி வடிகட்டி குடித்துவர நீர் எரிச்சல், ஆண்குறி எரிச்சல் குணமாகும். அறுகம்புல்லை ஒரு கைப்பிடி எடுத்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி குடிக்க வயிற்று எரிச்சல் நீங்கும்.
7. வெள்ளைப்படுதல்
ஒரு கைப் பிடி அளவு அறுகம் புல்லையும் கீழாநெல்லியையும் சேர்த்து அரைத்து அதனை தயிரில் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட வெள்ளைப்படுதல் தீரும். மேலும் நீர்த்தாரை எரிச்சல், இரத்தப்போக்கு, உடல் எரிச்சல், நீர்த்தாரை புண்களின் வலியும் தீரும்.
8. இரத்த ஒழுக்கு
கணு நீங்கிய அறுகம்புல் 30 கிராம், மாதுளை இலை 30 கிராம் அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி 50 மி.லி. அளவாக 3 மணி நேரத்திற்கு ஒருமுறை குடித்து வந்தால் காது, மூக்கு, ஆசனவாய் இரத்த ஒழுக்கு நிற்கும். வெப்பந்தணியும். மாத விலக்கு சிக்கல் நீங்கும்.
9. மன அமைதி
கணு நீக்கிய பசுமையான அறுகம்புல் ஒரு கைப்பிடி, மிளகு 6, சீரகம் 2 சிட்டிகை அரைத்து எலுமிச்சை அளவு வெறும் வயிற்றில் ஏழு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு பால் குடித்துவர மன அமைதி பெறலாம்.
நல்வாழ்வும் - தெய்வீக அழகும்
தினசரி அறுகம்சாறு அருந்தி வந்தாலே நல்லுடல் பெறலாம். மேலும்,
ஃ உடல் வெப்பம் தணியும்
ஃ முகம் வசீகரப்படும்
ஃ வாத, பித்த, கபநோய் தடுக்கப்படும்
ஃ இரத்தம் சுத்தம் பெறும்
ஃ மலச்சிக்கல் ஒழியும்
ஃ பலவிதமான மருந்துகளை உட்கொண்டதால் ஏற்படும் நச்சு விலகும்.
ஃ உடல் வலுப் பெறும்.
பெரியோர் வாக்கு:
மலத்தில் சிக்கல் மனதிலும் சிக்கல்
குடல் சுத்தமே உடல் சுத்தம்
அகத்தில் அழுக்கு முகத்தில் இழுக்கு
தொந்தி வந்தால் தொல்லைகளும் வரும்
வயிறு சுருங்க வாழ்வு பெருகும்
வயிறு பெருத்தால் வாழ்வு சுருங்கும்
உண்டி சுருங்குதல் பெண்டிற்கு அழகு
மலவாய் சுருக்குதல் யாவர்க்கும் அழகாம்.
என்பதை சிந்தனைக்கு எடுத்துக் கொள்வோம். மூலம் தரும் ஈகையினை முறையாகக் கடைப்பிடித்து வளமான வாழ்வு காண்போம்.
_
Commenti